×

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்: ஈபிஎஸ்-யின் அதிரடி வாக்குறுதி..!

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். 

அப்போது அவர் பேசுகையில், "சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் 1200 லிருத்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்றார்.

இரண்டாவது வாக்குறுதியாக மாணவர்கள். பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும் எனவும் மூன்றாவது வாக்குறுதியாக வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப  அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

"தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் மருத்துவ அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்பட்டு, ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்தார்.