அதிமுக-பாஜக கூட்டணியில் சேர தவெக-வுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய விஜய்யின் தவெக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற பிரச்சாரப் பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து பரப்புரைசெய்து வருகிறார். இதனிடையே ஆங்கில நாளிதல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவரிடம் கூட்டணியில் சேர விஜய் கட்சியை அழைப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என பதிலளித்தார். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என்பது விஜய் கட்சிக்கும் பொருந்தும் என்றும் எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரம், தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் விளக்களித்துள்ளார்.
ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தொண்டர்களை உற்சாகப்படுத்தவே கூட்டணி ஆட்சி என்று பாஜகவினர் பேசி வருவதாகவும், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்றும், 100 சதவீதம் கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் கூறவில்லை எனவும், அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன் என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருக்கிறார்.