×

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை.. 

 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கிடையே பாஜகவினரை இழுக்க எடப்பாடி பழனிசாமி தனி குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த சில மாதங்களாகவே அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.  அண்மையில் கூட தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி.விங்க் நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர்.  இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  பாஜக, அதிமுக இடையே மோதல் போக்கு வளர்ந்து வருகிறது.  

இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எதற்கும் எதிர்வினை உண்டு என்று பதிலடி கொடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, செய்கையில் இறங்கி விட்டார்.  இதற்கிடையே  பாஜக நிர்வாகிகளை இழுக்க, எடப்பாடி பழனிசாமி  அதிமுகவில் ஒரு குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழு பாஜகவில் அதிருப்தியில் குறிப்பாக அண்ணாமலையால் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது.  

 நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  இடைத்தேர்தல் தோல்வி, அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து  நாளை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.