×

பொறியியல் சேர்க்கை 2025- விண்ணப்பப் பதிவு நாளை முதல் தொடக்கம்

 

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பு, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விண்ணப்பப்பதிவை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. அதேவேளையில்,  பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. 2025-26ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த கல்லூரிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து, அதன் விவரங்களையும் வீடியோவாக பதிவு செய்தும், பணியாளர்கள் விவரத்தையும் கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்டனர். 

இந்நிலையில், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து பொதுத் தேர்வெழுதிய 12-ம் வகுப்பு  மாணவர்களுக்கான தேர்வு முழுவுகள் நாளை மறுநாள் (மே.8) வெளியிடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் தொழில்படிப்புகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டய படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை- 2025 ல் மாணவர்கள் தனிப்பட்ட விபரங்களை பதிவு செய்தல், தேர்வு நிரப்புதல், கலந்தாய்வு கட்டணம் செலுத்துதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் என அனைத்தும் முழுமையான ஆன்லைன் முறையில் நடைபெறும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளமான https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

அதன்படி நாளை காலை 10 மணிக்கு விண்ணப்பம் பதிவு தொடங்குகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் விண்ணப்பப்பதிவை தொடங்கி வைக்க உள்ளார். பொது தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு  மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை TNEA இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு பாடவாரியாக மதிப்பெண், மதிப்பெண் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்து,  கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும், Directorate of Technical Education (DoTE), 53, Sardar Patel Road, Guindy, Chennai - 600 025 என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை 2023-ம் ஆண்டில், 441 பொறியியல் கல்லூரிகளில் 1,60,297 இடங்கள் அனுமதிக்கப்பட்டன. அந்த இடங்களில் சேர்வதற்கு 1, 79, 114 மாணவர்கள் விண்ணப்பித்து,  1, 16, 620 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். 2024ம் ஆண்டில் 434 பொறியியல் கல்லூரிகளில் 1, 80, 115 இடங்கள் அனுமதிக்கப்பட்டதில்,  சேர்வதற்கு 2,00,007 மாணவர்கள் கலந்துகொண்டு, 1, 30, 938 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். அதேபோல், உயர்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 171 அரசுக் கல்லூரிகள் மற்றும் 162 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றிற்கு www.tngasa.com இணையதளத்திலும் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது.