டாஸ்மாக்கை பூட்டி சென்ற ஊழியர்கள்- தனியார் பார்களில் குவிந்த மதுபிரியர்கள்!
ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து டாஸ்மாக் கடைகள் திடீரென அடைக்கப்பட்டதால் தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் மதுபிரியர்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தவெக அரசு நடத்திய அதிரடி சோதனையில், எம்.ஆர்.பி (MRP) விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரே நேரத்தில் 277 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர டாஸ்மாக் நிர்வாகம் 5 கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிற்சங்கங்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்றதாக வந்த புகார்களின் பெயரிலும் முறைகேடுகளில் ஈடுபட்ட டாஸ்மார்க் ஊழியர்கள் 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் இன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து டாஸ்மாக் கடைகள் திடீரென அடைக்கப்பட்டதால் தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் மதுபிரியர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க பல இடங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இதை பயன்படுத்தி, டாஸ்மாக் கடைகளில் ₹165-க்கு விற்கப்படும் குவாட்டர் பாட்டில் தனியார் பார்களில் தட்டுப்பாடு காரணமாக ₹210 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் மதுபிரியர்கள் புகார் அளித்தனர்.