×

மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர்கள் அறிவிப்பு..

 

மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற்றிட சிறுபான்மையினர்  சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் மற்றும்  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள்  தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த 1000 பேருக்கு இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கவும்,அதற்காக 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் அண்மியில்  தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி தகுதியுடையவர்கள் அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.  அதன்படி தற்போது இலவச தையம் இயந்திரம்பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  

இதுதொடர்பாக ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் போன்ற சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு  மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.  இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.    ஆண்டுவருமான உச்சவரம்பு ரூ.1,00,000/ ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.  கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும்   ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து உரிய விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.