×

இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு: பிப்.18 முதல் விண்ணப்பிக்கலாம்..!

 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வை எழுத, பணியிலுள்ள ஆசிரியர்கள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை https://trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் ஒன்றை ஜூலை 4ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள் 2 ஜூலை 5ஆம் தேதியும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) நடத்துவதற்கான அறிவிப்பு http://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்ரவரி 13ஆம் தேதியான இன்று வெளியிடப்படுகிறது.

1.9.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக (Online Application) 18.2.2026 முதல் 10.4.2026 வரை விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை குறைத்து சலுகை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத பணியிலுள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும், அதில் தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகுதித்தேர்வால் தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனினும், இவர்கள் அனைவரும் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட சமயத்தில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து கல்வி மற்றும் செய்முறைகளை பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.