சென்னையில் முடங்கியது மின்சார ரயில் சேவை: பொதுமக்கள் கடும் அவதி..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 10 மற்றும் 11 ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம், சென்னை கடற்கரையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் வழக்கமாக வரும் நடைமேடைக்கு மாற்றாக நடைமேடை 5, 6 ஆகியவற்றிக்கு வந்து செல்கின்றன. மேலும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடைமேடை 5, 6 ஆகியவற்றிக்கு வரவேண்டிய மின்சார ரயில்கள் சேத்துப்பட்டில் நின்று விடுகின்றன. இதனால் குறிப்பிட்ட இடைவெளியில் ரயில் சேவை இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்காக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் நடைமேடைக்கு செல்வதற்கு வழிகாட்ட ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புறநகர் மின்சார ரயில் வேகமாக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், வழக்கமாக 10 முதல் 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரயில் என்பது தற்போது 40 நிமிடம் கடந்தும் வரவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.