☰
×

மின் வாரியத்தின் அதிரடி உத்தரவு: இனி வீடுகளுக்கு கரண்ட் பில் எடுக்க போவது யாரு தெரியுமா?

 

தமிழகத்தில் வீடு, கடைகளை உள்ளடக்கிய தாழ்வழுத்தப் பிரிவில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய பணியாளர்கள் நேரில் சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.

உயரழுத்தப் பிரிவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, ஆளில்லாமல் தானியங்கி முறையில் மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால், கணக்கீட்டாளர் மட்டுமின்றி, ஓய்வுபெற்ற பணியாளர்களும் மின் பயன்பாடு கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; சிலர் நேரில் செல்லாமல், இஷ்டத்திற்கு கணக்கு எடுப்பதால், அதிக மின் கட்டணம் வருவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், முதல் முறையாக தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளுமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணியாளர்கள் பற்றாக்குறையால், சில இடங்களில் மின் பயன்பாடு கணக்கு எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அதிக மின் கட்டணம் வருவதாக, நுகர்வோரிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, குறைந்த மதிப்புடைய, 'லிமிடெட் டெண்டர்' முறையில் ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்து, ஆறு மாதங்களுக்கு மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக பணியமர்த்தப்படும் பணியாளர்கள், சென்னை மாநகராட்சியில் தினமும் குறைந்தது 250 மின் இணைப்புகள், பிற மாநகராட்சிகளில் 220 இணைப்புகள், நகராட்சிகளில் 200 இணைப்புகள், பேரூராட்சிகளில் 180 இணைப்புகள், கிராமங்களில் 110 இணைப்புகள், மலைப் பகுதிகளில் 80 மின் இணைப்புகளில், மின் பயன்பாடு கணக் கெடுக்க வேண்டும்.

இந்த பணிகளை, அடுத்த மாதம் முதல் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணிக்காக, தற்போது ஒரு இணைப்புக்கு 5 ரூபாய் ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.