மழைக்காலத்தில் கரண்ட் கட் ஆகாமல் இருக்க மின்சார வாரியத்தின் பலே திட்டம்!
தமிழ்நாடு மின்சார வாரியம் அனைத்து மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2026 ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் அனைத்து விநியோக வட்டங்களிலும் நுகர்வோருக்குத் தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலத்திற்கு ஊழியர்களைப் பணியமர்த்த, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் அனைத்து விநியோக வட்டங்களிலும் நுகர்வோருக்குத் தடையற்ற மற்றும் தரமான மின் விநியோகத்தை உறுதி செய்ய ஜூன் 2 தொடங்கி ஜூலை16 ஆம் தேதி வரையில் சுமார் 45 நாட்களுக்கு கூடுதலாக பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் உள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் 10 நபர்கள், மலைப்பகுதிப் பிரிவுகளான நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், போன்ற பகுதிகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் 8 நபர்கள் என பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம்.
இதேபோல், அனைத்து விநியோக வட்டங்களிலும் உள்ள எஞ்சியிருக்கும் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் 6 நபர்கள் வீதம் நியமித்துக் கொள்ளலாம். கூடுதல் மனிதவளத்தை ஈடுபடுத்தும் போதும், பயன்படுத்தும் போதும் விரிவான பதிவேடுகளை, சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் பராமரிக்க வேண்டும். அலுவலர்கள், ஊழியர்களின் உறவினர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தக் கூடாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.