மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மின்வெட்டால் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துவருகின்றனர். திருவொற்றியூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு. காலை 11 மணி முதல் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பொதுமக்கள் மின்னகம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அதேபோல் சென்னை பெருங்குடி ஓ.எம்.ஆர் (OMR) சாலையில் உள்ள பிரபல அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின் தடை காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த நோயாளிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருளில் மூழ்கி கடும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனையின் சில முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டதால், குறிப்பாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்குச் சுவாசிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அவசர கால மின் சேமிப்பு வசதியான பவர் பேக்கப் (Power Backup) மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏற்பாடுகள் உரிய நேரத்தில் செயல்படாததால், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களும் பொதுமக்களும் கடும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததோடு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான அவசர கால மாற்று ஏற்பாடுகள் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைகளில் ஏற்படும் மின் தடையை தடுக்கவும், மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகள் பாதிக்கப்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.