×

அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் - தேர்தல் அதிகாரி தகவல்

 

அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தினர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குடன், எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில்,  அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி  செய்திருந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினரும் கலந்துபேசி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்டை வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிட்டது. 

அதனைத்தொடர்ந்து தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.  இதில், 2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக ஒப்புதல் படிவங்களை வழங்கியுள்ளனர்.  ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் படிவங்களை பெற்ற 128 பேரில் ஒருவர் கூட இபிஎஸ் ஆதரவு வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக படிவம் வழங்கவில்லை. இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவார் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதன் காரணமாக மீண்டும் இருதரப்பும் ஒன்றிணையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என  ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன். அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.