இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை - தேர்தல் கமிஷனை சாடிய ராகுல்..!!
வரும் சட்டசபை இடைத்தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இதற்கு தேர்தல் கமிஷனை லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், 'பூக்கள் மற்றும் புல்' சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானா்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணமுல் காங்கிரஸ். ஒவ்வொரு முறையும் இதே பாணிதான் பின்பற்றப்படுகிறது. ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பாஜவும் தேர்தல் ஆணையமும் ஒன்றிணைகின்றன; பின்னர் அந்தக் கட்சியின் சின்னம் பறிக்கப்படுகிறது. ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் ஓட்டுக்கள் திருடப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
திருடப்பட்ட ஓட்டுக்கள், அபகரிக்கப்பட்ட அரசு, இப்போது பறிக்கப்பட்ட கட்சி, இவை அனைத்தும் நமது ஜனநாயகச் சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதே தேர்தல் கமிஷனின் அரசியலமைப்புச் சார்ந்த கடமையாகும்; ஆனால், அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றும் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.
இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல; சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டமாகும் இது. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.