தவெகவில் 20 நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி
என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின் போது பல்வேறு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி வழங்கப்படும். இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த கட்சிகளுக்கு 20 நட்சத்திர பேச்சாளர்களும் அனுமதி அளிக்கப்படும். இதன்படி இதுவரை தமிழகத்தில் 262 நட்சத்திர பேச்சாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர் பி உதயகுமார், மேலும் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த காளியம்மாள் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட 40 பேச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியில் சீமான் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட 15 நட்சத்திர பேச்சாளர்கள், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் வி.கே.சசிகலா உள்ளிட்ட 20 பேச்சாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களுடன் ரூ.1 லட்சம் வரை வைத்து கொள்ளலாம் நட்சத்திர பேச்சாளரின் பயண செலவுகள் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேராது.