“TVKக்கு போட சொன்னா... காங்கிரஸ்க்கு போட்டுட்டாங்க”- தபால் வாக்கை மாற்றிவிட்டதாக அதிகாரிகள் மீது மூதாட்டி புகார்
காரைக்குடி தொகுதியில் மூதாட்டியின் தபால் வாக்கை மாற்றி போட்டதாக புகார் எழுந்துள்ளது.
வருகின்ற 23.04.2026 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் தமிழகத்தில் தபால் வாக்கு தொடங்கியது. வாக்கு சேகரிக்கும் குழுவில் உள்ள மண்டல அலுவலர், வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண் கண்காணிப்பு அலுவலர், ஒளிப்பதிவாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உள்ளிட்ட குழுவினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெரும் பணியில் இன்று இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் காரைக்குடி தொகுதியில் மூதாட்டி ஒருவரின் தபால் வாக்கை தவெகவிற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரிகள் பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது. தான் TVK கட்சிக்கு போட சொன்னதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றி போட்டதாக தேர்தல் அதிகாரிகள் மீது மூதாட்டி புகார் அளித்துள்ளார். புகார் கொடுக்க சென்றபோது சார் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிசிடிவி பதிவு இருப்பதால் ஆய்வு செய்து புகார் உண்மை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.