கேரளாவில் பயங்கரம்: வீட்டு லிப்ட்டில் தலை மாட்டிக்கொண்டு மாற்றுத்திறனாளி முதியவர் பரிதாப மரணம்!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே, வீட்டில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக லிப்ட்டில் எதிர்பாராதவிதமாக தலை மாட்டிக்கொண்டதில் 75 வயது மாற்றுத்திறனாளி முதியவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடம்மனிட்டா கல்லேலிமுக்கு பகுதியைச் சேர்ந்த மாத்துக்குட்டி (75) என்ற அந்த முதியவர், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (KSRTC) ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவரால் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முடியாத நிலை இருந்தது. இவரது வீடு சாலையிலிருந்து சற்றே உயரமான மேட்டுப் பகுதியில் அமைந்திருந்ததால், காரை நிறுத்தும் இடத்திலிருந்து வீட்டிற்கு எளிதாகச் செல்வதற்காக இரும்பு பைப் மற்றும் பீம்களைக் கொண்டு, வீட்டின் வெளிப்புறத்தில் எளிய 'சர்வீஸ் லிப்ட்' போன்ற ஒரு அமைப்பை அவர் நிறுவியிருந்தார்.
சம்பவத்தன்று பிற்பகல் காரில் வந்த மாத்துக்குட்டி, வழக்கம் போல வீட்டிற்கு மேலே செல்வதற்காக அந்த லிப்ட்டில் ஏறியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக அவர் லிப்ட்டில் இருந்து தலையை வெளியே நீட்டியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் இரும்புச் சட்டங்களுக்கு இடையே அவரது தலை கொடூரமாக மாட்டிக்கொண்டது.
தலையை வெளியே எடுக்க முடியாமல் அவர் போட்ட அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, கணவரைக் காப்பாற்றப் போராடினார். ஆனால், இரும்புச் சட்டங்களை அவரால் பிரிக்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி, இரும்புப் பைப் மற்றும் பீம்களை 'கட்டர்' மூலம் வெட்டி எடுத்து மாத்துக்குட்டியை மீட்டனர். எனினும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் நீண்ட நேரம் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்குள்ளான அந்த லிப்ட் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் அமைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.