×

“ஈகோ தான் எல்லாத்துக்கும் காரணம்”- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

 

அன்புமணியுடன் பேச ராமதாஸ் தயாராக இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை பாமக பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி நாளை கூட்டியுள்ளார். அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட  மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ராமதாஸ், அன்புமணி இருவரையும் தன் அறைக்கு வரும்படி  அழைப்பு விடுத்தார். தைலாபுரத்தில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் காணொலி வழியாக பேசினார். அதேபோல் அன்புமணி ராமதாசும்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ராமதாஸ்- அன்புமணி உடன் நீதிபதி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இருதரப்பு வழக்கறிஞர்களும் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்  உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள வழக்கு குறிப்பில், “நீதிமன்றம் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச நிலையை எட்டுவதற்கான முயற்சியாக இருவரையும் ஐந்தரை மணிக்கு நீதிபதியின் அறைக்கு வர சொன்னது. அன்புமணியுடன் பேச ராமதாஸ் தயாராக இல்லை. அப்பா மகனிடையே, துரதிஷ்டவசமான ஈகோ சண்டையால் சிக்கல் உருவாகியுள்ளது. பல்வேறு காரணங்களினால் கண்ணுக்கு கண் பார்த்து இருவராலும் பேசிக் கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக, கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, சிலர் ராமதாசையும், மற்றவர்கள் அன்புமணியையும் ஆதரிக்கின்றனர். பொதுக்குழு கூட்டுதல் சட்டவிரோதமா இல்லையா என்பது உரிமையியல் கேள்வியாக மாறுகிறது. இதனை ரிட் மனுவாக தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல.பொதுக்குழுவுக்கு (உள்ளரங்க கூட்டம்) போலீஸ் அனுமதி தேவையில்லை. சட்ட ஒழுங்கு சிக்கல் வந்தால், காவல்துறை அதை எதிர்கொண்டு இயல்பு நிலையை உறுதி செய்யும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.