“பத்து தோல்வி பழனிசாமி என்று என்னை கிண்டல் பண்ணுனீங்களே... இப்ப உங்க தொகுதிலயே தோத்துபோயிட்டீங்களே ஸ்டாலின்”- இபிஎஸ்
கூட்டணிக்குள் குழப்பம் வந்து விட்டது தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஆளும் கட்சி 108 இடங்களில்தான் வெற்றிபெற்றுள்ளனர். பல கட்சிகள் ஆதரவு கொடுத்துதான் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நாற்காலிக்கு 4 கால்கள் இருக்கும். அதில் இரண்டுதான் ஆளுங்கட்சியுடையது. மீதி இரண்டு கால் இரவல் கட்சியினுடையது. அந்த இரண்டு கால்கள் விலகும் பொழுது நாற்காலி தானாக சரியும். அப்படிப்பட்ட நிலைமைதான் தவெகவிற்கு உள்ளது. கூட்டணிக்குள் குழப்பம் வந்து விட்டது தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும். பலபேர் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என சுகத்தை அனுபவித்துவிட்டு பல்வேறு வசதி வாய்ப்புகளைப் பெற்று விட்டு மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். அதிமுகவில் வெற்றி பெற்ற நான்கு எம்.எல்.ஏக்களை குதிரைபேரம் பேசி ராஜினாமா செய்து உள்ளார்கள். அந்த 4 பேரை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு, பகலாக உழைத்து வெற வைத்தார்கள். விரலில் இருக்கும் மை கூட அழியல, வாக்காள பெருமக்களுக்கு துரோகம் செய்துவிட்டீர்கள். உங்களை இருபெரும் தலைவர்களின் ஆன்மா மன்னிக்காது.
கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் ‘பத்துத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த பழனிசாமி' என்று சொன்னார். இப்போது என்ன ஆகியது, அவரே தோற்றுப் போய் விட்டார். அதனால்தான் ஆட்சி அதிகாரம் இருக்கும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். அப்போது பணிவும் வர வேண்டும். அதனால் த.வெ.க தலைவர் மற்றும் நிர்வாகிகளே அடக்கி வாசியுங்கள். இல்லையென்றால் இந்த மாதிரியான நிலைமை வருங்காலத்தில் வரும். ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரிந்தும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது ஏன்? இப்போது திட்டங்களை அறிவிக்கிறார்கள். அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை அறிவிக்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வெற்று வாக்குறுதியா? அல்லது நிறைவேற்றுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.