“உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்”- இபிஎஸ்
தென்மாவட்டங்களில் NDA கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். மதுரை என்று சொன்னால் மீனாட்சி அம்மன்தான் ஞாபகத்துக்கு வருவார். திமுக கூட்டணி இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. NDA கூட்டணி கட்சிகள் தான் முதலில் பிரச்சாரத்தை தொடங்கின. தொண்டர்கள், நிர்வாகிகள் 234 தொகுதிகளிலும் தேனீக்களாக, எறும்புகளாக தேர்தல் பணியாற்ற வேண்டும். தென்மாவட்டங்களில் NDA கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளது. மோடி பிரடமராக பொறுப்பேற்ற பின் இந்திய நாடே வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நிதி ஒதுக்குகிறார். ஆனால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் அவதூறு பரப்புகிறார்.
ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வந்தோம். திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரி கூட வரவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய அரசை முதலமைச்சர் குறை சொல்கிறார். மதுரை எய்ம்ஸ் பணிகளை திமுக அரசு முடக்கப்பார்க்கிறது.” என குற்றஞ்சாட்டினார்.