×

"ஸ்டாலினிடம் திறமையும் இல்லை பிளானும் இல்லை" - எடப்பாடி குற்றச்சாட்டு! 

 

வடகிழக்குப் பருவமழை சென்னையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சென்னையில் மழை பாதித்த பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். தொடர்ந்து இன்று மூன்றாம் நாளாக வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டார். இன்று சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் 523 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

அதனை அகற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். எங்கள் மீது பழி சுமத்த வேறு காரணம் கிடைக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் என்று முதலமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டது என்று மத்திய அரசால் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின்  நகராட்சி நிர்வாகத்துறை மட்டும் 140 விருதுகளை பெற்றுள்ளது. 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது தெரியவில்லை. கடுமையாக மக்கள் பாதித்து உள்ள நிலையில், உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து உள்ளார். ஆனால் அவருக்கு எவ்வாறு இந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை. திறமையான அரசாங்கம் இல்லை. அதனை மறைக்கத் தான் அதிமுக அரசை அவர்கள் குறை கூறி வருகிறார்கள். ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படவில்லை. அதனால் தான் வெள்ளத்திற்குக் காரணம்” என்றார்.