×

எடப்பாடி பழனிசாமி மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வர் வேட்பாளர் - அண்ணாமலை..!

 

கோவையின் தொண்டாமுத்தூர் பகுதியில் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நேற்று இரவு (மார்ச் 13) நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுகவின் ஊழல் ஆட்சியைத் தொடர விடக்கூடாது என மக்கள் முடிவெடுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

"கோவை மாவட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக செய்த பணிகளையே தாங்கள் செய்ததாகக் கூறி திமுகவினர் வாக்கு கேட்கின்றனர். பால் விலை முதல் சொத்துவரி வரை அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. 28 மாதங்களாக வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், இப்போது ஒரு சிறு தொகையைக் கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள். கோவை எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்" என அவர் சவால் விடுத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ”தமிழகத்தில் எத்தனை இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடந்தாலும், இதுபோல் மக்கள் திரளாக கூடிய கூட்டத்தை எங்கும் காணவில்லை.தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த முறை அதிமுக–பாஜக கூட்டணி இத்தொகுதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 8,008 கொலைகள் நடந்துள்ளன. விளாத்திகுளம் மாணவி விவகாரத்தில் காவல்துறை காட்டிய அலட்சியமே அந்த மாணவியின் உயிரிழப்புக்குக் காரணம். 

தமிழகத்தில் நடப்பது மக்களின் ஆட்சி அல்ல, சபரீசன் குடும்பத்தின் ஆட்சி. திமுகவினர் மக்கள் சொத்துகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி மக்களுக்குச் சென்றடைந்தன. ஆனால் இப்போது கிராமங்களுக்குக் கூட அடிப்படை வசதிகள் சென்றடைவதில்லை.

எடப்பாடி பழனிசாமி மக்களின் கஷ்டங்களை அறிந்த முதல்வர் வேட்பாளர். மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்” என அண்ணாமலை உறுதி அளித்தார்.