" வீராதி வீரர்தான் எடப்பாடி பழனிசாமி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
Jun 25, 2024, 10:43 IST
மூன்றாவது நாளாக கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்றது, அதிமுகவினரின் மனதையும் கண்களையும் உறுத்துகிறது. எனவே சட்டப்பேரவை நடவடிக்கைகளில் திட்டமிட்டு இடையூறு செய்கின்றனர். இதை திட்டமிட்டு திசை திருப்ப இதுபோன்ற பிரச்சனைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர். பேரவையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தவும் அதிமுக உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது அவர் மீது போடப்பட்ட வழக்கில் சிபிஐ மீது நம்பிக்கை இல்லை என காரணம் காட்டி அதற்கு தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரனான எதிர்க்கட்சித் தலைவர் தான் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார் என்றார்.