×

சவுக்கு சங்கரின் தாயார் மரணத்திற்கு தி.மு.க அரசின் பழிவாங்கும் அரசியலே காரணம் - எடப்பாடி பழனிசாமி..! 

 

யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார் கமலா அவர்களின் மரணம் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  சவுக்கு சங்கர் மீது இந்த தி.மு.க அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான அடக்குமுறை நடவடிக்கைகளும், அவர் அடுத்தடுத்து சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது தாயாருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. தன் மகன் சிறையில் வாடுவதைக் கண்டு ஒரு தாயாக அவர் அடைந்த வேதனை சொல்லொணாதது. தி.மு.க அரசு கொடுத்த இந்தத் தொடர் மன அழுத்தமே அவரது உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பத்திரிகை சுதந்திரத்தை ஸ்டாலின் நசுக்கிவிட்டார், குரல் வளையை நெறித்துவிட்டார், சவுக்கு சங்கர் தாயார் மன வேதனையில் இறந்து விட்டார். நான் இருக்கும்போது என்னையும் விமர்சித்தனர். அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் அவர் வீட்டில் மலத்தை கொட்டினார்கள். ஒரு தாயின் மனம் எப்படி நொந்துபோகும் என்று நினைத்துப் பாருங்கள். அந்தக் கொடுமைக்கு சரியான பாடம் கொடுப்பீர்களா..? மனம் வேதனைப்பட்டு மண்ணிலிருந்தே மறைந்துவிட்டார், இதற்கு காரணமானவர்கள் எதிர்காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தமிழக அரசின் நிர்வாகம், அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்களைத் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், சவுக்கு சங்கர் பழிவாங்கப்படுவதாக இ.பி.எஸ் குறிப்பிட்டார். மக்கள் நலனுக்காகப் பேசுபவர்களை அதிகாரத்தால் ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது. பெண் போலீசாரை அவதூறாகப் பேசிய வழக்கில் 2024-ல் கைதாகி, குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்தார். பின்னர், கஞ்சா வழக்கு உள்ளிட்ட புகார்களில் மீண்டும் கைது செய்யப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக நிபந்தனை ஜாமீனில் இருந்த சங்கர், நிபந்தனைகளை மீறியதாகக் கூறி கடந்த 8-ஆம் தேதி ஆந்திராவில் வைத்துத் தமிழக போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருக்கும் தனது மகனை விடுவிக்க அவரது தாயார் கமலா அவர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். மகனுக்காகப் போராடி வந்த நிலையில், இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் பரோல் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களாட்சியில் விமர்சனங்களை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மறைமுகத் தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த மரணத்திற்கு தி.மு.க அரசின் பழிவாங்கும் அரசியலே காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் இ.பி.எஸ் தெரிவித்தார்.