×

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?- எடப்பாடி பழனிசாமி

 

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கி குடித்த  மீன் வியாபாரி  68 வயது  குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில், உரிய நேரத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானம் அருந்திய திரு குப்புசாமி , திரு விவேக் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி? என்பதனை இந்த அரசு தெளிவுபடுத்த வேண்டும். முறையற்ற மது விற்பனையால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அரசே ஏற்று மதுவிற்பனையை நடத்தி வருகிறது‌. அப்படி இருக்கையில் சமீபகாலமாக அரசு மதுபான விற்பனையில் பல்வேறு திட்டமிட்ட முறைகேடுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருவதையும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.