×

அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது- எடப்பாடி பழனிசாமி

 

ஸ்டாலினும், உதயநிதியும், அதிமுக, பாஜகவின் பி டீமாக இருப்பதாக பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சேலம் திருவாக்கவுண்டனூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் மக்களை ஏமாற்ற நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். மக்களிடம் கையெழுத்துகளை பெற்று யாரிடம் கொடுத்து எப்படி நீட் தேர்வை ரத்து செய்வீர்கள்? நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் என மக்களை ஏமாற்றுகின்றனர். திமுக ஆட்சியில் காவிரி நீரை பெறாததால் சம்பா பயிர் செய்ய முடியாததால் அரிசி விலை மேலும் அதிகரிக்கும். திமுக ஆட்சியில் அனைத்து மளிகை பொருட்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துவிட்டது. அரசு சரிவர செயல்படவில்லை என்றால் அதன் மதிப்பு மக்களை வந்துசேரும்.

அதிமுகவுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதுமே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. ஸ்டாலினும், உதயநிதியும், அதிமுக, பாஜகவின் பி டீமாக இருப்பதாக பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். பி டீமும் இல்லை.ஏ டீமும் இல்லை. நாங்கள் அதிமுக ஒரிஜினல் டீம். இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை மகனை அமைச்சராக்கியது.

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது ஆனால் கட்சியின் கொள்கை நிலைய்னது. பாஜக அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதை தூக்கி எறிந்த கட்சி அதிமுக. கூட்டணிக்காக பெங்களூரு சென்ற ஸ்டாலின், காவிரி நீர் தொடர்பாக ஏன் கேட்கவில்லை? காவிரி உரிமையை பெற்றுத்தர முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்” என்றார்.