×

"முதல்வருக்கு மட்டும் தகவல் அளித்தது தவறு"- எடப்பாடி பழனிசாமி

 

சட்டமன்றத்தில் தங்களைப் பேச அனுமதிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத்தில் தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. ஜனநாயக மரபுகளுக்கு மாறாக செயபடுகின்றனர் எதிர்க்கட்சியின் குரல் ஒடுக்கப்படுகிறது. விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச அவையில் அனுமதி கேட்டோம். ஆனால், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பச் சபாநாயகர் அனுமதி தராததால், அதைக் கண்டித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். மேகதாது அணை விவகாரத்தில் விதிகளுக்கு எதிராக தீர்மானத்தில் திருத்தம் செய்தது கண்டிக்கத்தக்கது. 


தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரும்போது சபாநாயகர் அனுமதி பெற்று முன்மொழிந்து, வழிமொழிந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டு திருத்தத்தை தீர்மானத்தில் இடம்பெற செய்ய வேண்டும். அதுதான் விதி. எங்கள் கையில் கிடைத்த தீர்மானத்தை தான் நாங்கள் ஆதரித்தோம். மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை. திருத்தப்பட்ட தீர்மானம் குறித்து பேரவையில் முதலமைச்சர் முன்மொழிய வேண்டும். மேகதாது தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது குறித்து முதலமைச்சர் யாருடைய கருத்துக்களையும் கேட்கவில்லை. முதலமைச்சருக்கு மட்டும் திருத்தம் குறித்த தகவல் தெரிவித்து உள்ளனர். உறுப்பினர்களுக்கு தெரியாமல், முதல்வருக்கு மட்டும் தகவல் அளித்தது தவறு. திருத்தம் வாக்கெடுப்புக்கு விடாமல், திருத்தப்பட்ட தீர்மானத்தை மட்டும் வாக்கெடுப்புக்கு எடுத்தது, மரபுக்கு மாறாக உள்ளது. பேரவை விதிகள் முற்றிலுமாக மீறப்பட்டுள்ளன. பேரவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசத்தான் அனுமதி கேட்டோம். மறுத்துவிட்டார்கள். காவிரி நதிநீர் தமிழகத்தின் ஜீவ நதி, இதனை நம்பி டெல்டா உள்ளிட்ட 20 மாவட்ட மக்கள் உள்ளனர்.. மீண்டும் நடுவர் மன்றம் வேண்டும் என்பது என்ன நோக்கத்திற்காக கேட்கின்றனர்..?” எனக் கேள்வி எழுப்பினார்.