×

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்காத எடப்பாடி பழனிசாமி

 

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்நிகழ்வில் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜீவால், பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் , மரகதம் குமரவேல், முன்னாள் எம்பி வேணுகோபால், பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகுமார், வெங்கடேஷ், சதாசிவம்,தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன்,புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருந்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி தலைமை நீதிபதி மோகன் ஶ்ரீவத்சவா உடன் வந்து நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ரவி மற்றும் அவரது மனைவி நினைவு பரிசு கொடுத்து மரியாதை செய்தனர். அதனை தொடர்ந்து சர்வதேச யோகா தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆளுநர் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்த நிலையில் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியும் ஆளுநர் ரவியின் விருந்தை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.