ராமநாதபுரத்தில் 30-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 55 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும்; வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
அந்த வகையில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:
இராமநாதபுரம் நகர மன்றத் தலைவராக திமுக-வைச் சேர்ந்தவர் இருந்து வருவதால், அவர் மக்கள் நலப் பணிகளில் ஈடுபடாமல், முற்றிலும் ஆதாய நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
நகராட்சியில், பெரும்பாலான வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில், பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பதால், பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
* இங்கு சாலைகள் முழுவதும் சேதமடைந்து, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
* இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளை ஒதுக்குவதில், திமுக-வைச் சேர்ந்த நகர மன்றத் தலைவர் உள்ளிட்ட திமுக-வினர், பெருத்த முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் வருகின்றன.
* இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும்; பாதாள சாக்கடைத் திட்டம் மருத்துவக் கல்லூரி வரை நிறைவேற்றப்படாததால், இங்கும் கழிவு நீர் கலப்பு ஏற்பட்டுள்ளதாலும், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகள், நாள்தோறும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
* மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை செயல்படவிடாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மூடிவிட்டதால், சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில், 30.12.2025- செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V.ராஜன் செல்லப்பா, M.L.A., தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் M.A. முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.