அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் சூழலில், அ.தி.மு.க.வின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்டார். அதன்படி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என்றும் அந்த தொகை இந்தத் தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும், ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, 125 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாள்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் 5 லட்சம் மகளிருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும், வீடு இல்லாதோருக்கு இடம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என்றும் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள நிதிச்சுமைக்கு மத்தியில் இந்த அறிவிப்புகள் எவ்வாறு சாத்தியமாகும் என்பது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “நாங்கள் ஆட்சி செய்யும் போது ரூ. 5.18 லட்சம் கோடிதான் கடன் இருந்தது. கரோனா காலத்தில்கூட நிதிச்சுமையைக் குறைத்து கொடுத்திருக்கிறோம். ஆளும் கட்சிக்கு திறமையில்லை; எங்களுக்குத் திறமை இருந்தது.
நிர்வாகத்திறன் இருக்கும் அரசு இருந்தால் நிதிச்சுமையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். நிர்வாகத் திறனற்ற அரசு இருந்தால் அதனைச் சமாளிக்க முடியாது. இரண்டாம் கட்டத் தேர்தல் அறிக்கைகள் வெளியிடும் போது அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன” என்றார்.