எடப்பாடி அட்டாக்..!! சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 100 பேரின் கட்சிப்பதவி பறிப்பு..!!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற தோல்வியால் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியின் பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ. மட்டும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே சி.வி.சண்முகத்திற்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட செயலாளராக பசுபதியை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு அணியும், மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபு ரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சிலர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அ.தி.மு.க. தலைமை மீது அதிருப்தி தெரிவித்த அவர்கள், உடனடியாக பொதுக்குழுவை கூட்டி தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இதற்கெல்லாம் அசராத எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக செயல்படும் அதிருப்தியாளர்களின் கட்சி பதவிகளை பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
ஏற்கனவே சி.வி.சண்முகத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவரது ஆதரவாளர்கள் பலரின் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டது. இருப்பினும் பிரச்சினை முடிவுக்கு வராத நிலையில் தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் சார்ந்துள்ள மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் முதல் கிளை செயலாளர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.