மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக் கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?
பொதுமக்களைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில், மழை வெள்ளத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டிருந்த போது, குறைகளை கேட்க வராதது ஏன்? என்று வினா எழுப்பிய பொதுமக்களை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும், அவரது ஆதரவாளர்களும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை புரிந்து கொண்டு அவர்களை அமைதிப்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் முயன்றிருக்க வேண்டும். மாறாக, தமக்கு வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக்கிய மக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.