களத்தில் மேயர் எங்கே?- துரை வைகோ
தமிழக அரசின் கடனை உடனடியாக குறைக்க வாய்ப்பில்லை என எம்பி துரை வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடலாம். நடிகர் தனுஷ் கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை, அது அவரவர் உரிமை. இறுதி முடிவை எப்போதும் மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள். தனுஷ் அரசியலுக்கு வந்தால் வரட்டும். விஜய் முதலமைச்சராக ஆவார்னு யாருமே எதிர்பார்க்கல.
தமிழக அரசின் மின்துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு கூடுதல் நிதி தேவை உள்ளது. ஏற்கனவே கடன் சுமை உள்ளது. எடுத்த உடனே கடனை குறைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், துறை சார்ந்த அமைச்சர் கூறியிருக்கிறார் என்றால், அது பற்றி தெரிந்த பிறகு தான் பேச முடியும். எல்லா துறையிலும் 30% முதல் 50% கமிஷன் போனது குறையும் போது, செலவு குறைந்து கடன் வாங்குவது குறையும். அதை தான் அமைச்சர் கூறியிருப்பார் என நினைக்கிறேன். கடந்த கால ஆட்சியாளர்களின் அலட்சியமே இன்றைய மின் தட்டுப்பாட்டுக்கு காரணம். இந்த மழை நேரத்தில் 17,000 மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக வேலை பார்த்திருக்கிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால், களத்தில் மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் என யாரையும் காணவில்லை. திட்டமிட்டு கட்சித் தலைமை களத்திற்கு போகாதீர்கள் என்று சொல்லிருப்பார்களா என்று தெரியவில்லை. திமுகவிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்" என்றார்.