×

“செங்கோட்டையன் அப்படி பேசியிருக்க கூடாது”- துரை வைகோ

 

மதிமுகவின் நிலைதான் அதிமுகவுக்கு ஏற்படும் என செங்கோட்டையன் பேசியதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

இதுடொடர்பாக துரை வைகோ கூறுகையில், “செங்கோட்டையனைத் தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது செங்கோட்டையன் நா தவறி கூட பேசியிருக்கலாம். அவர் வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி அமைச்சர் செங்கோட்டையன் மதிமுகவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது வாய் தவறிதான் பேசி இருப்பார். மதவாதத்திற்கும் ஊழல்வாதத்திற்கும் எதிராக அமைக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. தமிழ்நாட்டில் அந்த இரண்டிற்கும் எதிராக உள்ள முதலமைச்சர் விஜய், இந்தியா கூட்டணிக்குத்தான் வருவார். அவர் இந்தியா கூட்டணிக்கு வருவதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. முதலமைச்சர் விஜய் வருங்காலப் பிரதமர் என அக்கட்சியினர் பேசுவதில் எந்தத் தவறும் கிடையாது. ஆர்வம் மிகுதியால் அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. பரந்தூர் பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை முதலமைச்சர் விஜய் கைவிட்டுள்ளார். ஆனால், சென்னையில் ஒரு பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அதை அவர் செய்ய வேண்டும். த.வெ.க. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி, ஆட்சியில் அமர்ந்துள்ளது. த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியிலும் அவர்கள் டீல் போட்டுள்ளனர். இந்தச் சூழலில், த.வெ.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். த.வெ.க.வினருக்கு கூட்டணிக் கட்சியினர் அரசியல் கற்றுக்கொடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் திமுகவினர் கண்ணாடிக் கூண்டிற்குள் இருந்து கல்லெறிவது போல் செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.