×

எங்களால் 100 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது- துரை வைகோ

 

கள்ளச்சாராய விற்பனை காலம் காலமாக நடைபெற்று வருகிறது, அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறவில்லையா? பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கள்ளச்சாராய விற்பனை இல்லையா? என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டியளித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கு கட்டியாவயல் அருகே மதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “இதுவரையில் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளனர். இது மிகவும் ஒரு துயரமான சம்பவம், இந்த சம்பவங்கள் நடந்த உடனே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு ஒன்றே தீர்வு என்பது எங்களின் கொள்கை. 

சாராய மரணங்கள் நிகழ்ந்தால் ஆயுள் தண்டனை கூட கொடுப்பதற்கு தயங்க கூடாது. எங்களால் 100 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. இன்னும் 500 கடைகளை மூடுவதாக தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம், அதே வேளையில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பதே மதிமுகவின் முடிவு. டாஸ்மாக் பார்களின் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதனை தமிழ்நாடு காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். 

தஞ்சையில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வில் அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு இருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. அது தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணங்களா? என்பது விசாரணைக்கு முன்பே தெரியும். இருந்தபோதிலும் எங்களை பொறுத்தவரையில் பூரண மதுவிலக்கு ஒன்றே இதற்கான தீர்வு என நினைக்கிறோம். மதிமுகவின் அவைத்தலைவரை தேர்ந்தெடுப்பது கட்சி நிர்வாகிகளின் முடிவு. ஜூன் 14-ம் தேதி கட்சியை நிர்வாகிகள் இதனை முடிவெடுப்பார்கள்.

கள்ளச்சாராய விற்பனை காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறவில்லையா? பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் கள்ளச்சாராய விற்பனை இல்லையா? செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய சொல்பவர்கள்..குஜராத் மாநில பால வித்தில் 135 பேர் உயிரிழந்தனர், இதற்கு அந்த மாநில பாஜக முதல்வர் ராஜினாமா செய்தாரா...? 2000 ரூபாய் நோட்டு கொண்டு வந்ததும், தவறு அதனை திரும்ப பெறுவதும் தவறு” என்று தெரிவித்தார்.