"இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தான்.."- துரை சந்திரசேகரன் பேட்டி
முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து ஆகஸ்ட் மாதம் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் மீது கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, விசாரணைக்காக புதன்கிழமை காலை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனையடுத்து வழக்கறிஞருடன் அவர் ஆஜரானார்.
சைபர் கிரைம் அலுவலகத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம். எல். ஏ. துரை சந்திரசேகரன், "என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகவும், வாய்மொழி மூலமாகவும் பதில் அளித்துள்ளேன். இந்த வழக்கிற்கு தொடர்ச்சியாக என்னுடைய ஒத்துழைப்பு கொடுப்பேன். புகார் கொடுத்தவர் யார் என்று எனக்கு தெரியாது. என்ன நடந்ததோ அதை நான் கூறியுள்ளேன். சந்தேகமே கிடையாது. இது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை தான்.. தி.மு.கவினர் மீது மட்டும் வழக்கா? த.வெ.க எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன்? முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் சைபர் கிரைம் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். முதல்வர் விஜய் பெரும்பான்மை இன்றி 110-க்கும் குறைவான எம்எல்ஏ-க்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்துகிறார். இந்த நிலையில் இரண்டு எம்எல்ஏ-க்களை வெளியே செல்லுங்கள் என்றா கூறுவார்? தமிழ்நாட்டின் தலையெழுத்து இது தான்" என்றார்.