×

சிஎம்சி டாக்டர்கள் குடியிருப்பில் நடைபெற்ற ED ரெய்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்

 

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரின் அறையில் இரண்டு நாளாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

கன்னியாகுமாரியை சேர்ந்த வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான பெல் கிங் (29) கடந்த மூன்று ஆண்டுகளாக அவசர சிகிச்சை பிரிவில் இளநிலை மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் CMC மருத்துவமனைக்கு சொந்தமான தோட்டப்பாளையத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர் தங்கியுள்ள அறையில் நேற்று (16.01.2026) காலை 7.30 முதல் இன்று மாலை வரை சென்னையை சேர்ந்த சுமார் 7 அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் திடீர் சோதனை மேற்கொண்டனர். மருத்துவர் பெல்கிங் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் மருத்துவர் பெல்கிங் இங்கு இல்லாததால் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததாகவும், இதனால் அவரின் அறை கதவை மருத்துவமனை நிர்வாகத்தினரின் முன்னிலையில் திறந்து சோதனை செய்துள்ளனர். இதில் சுமார் 33 கிராம் அளவுக்கான கஞ்சா மற்றும் போதை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வேலூர் வடக்கு காவல் நிலைத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வேலூர் வடக்கு காவல் துறையினர் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவினர் போதை பொருட்களை பறிமுதல் செய்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மருத்துவர் பெல்கிங்கின் கூட்டாளிகளை வெளி மாநிலத்தில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாகவும். மருத்துவர் பெல்கிங் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் போதை பொருள் தொடர்பாக பெல் கிங்கின் வங்கி கணக்கில் சட்டவிரோதமாக பல லட்சம் ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்துள்ளதால் இது குறித்து தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.