குடிநீரே உயிரை பறித்த அவலம்! விருதுநகரில் 8 பேர் உயிரிழப்பு
விருதுநகர் அருகே கால்சியம் கலந்த நிலத்தடி நீரால் ஒரே கிராமத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் அருகே உள்ள குமராபுரம் என்ற கிராமத்தில் தரமற்ற குடிநீரால் ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 8 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். விருதுநகர் அருகே உள்ளது குமராபுரம். இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிராம பஞ்சாயத்து சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு நிலத்தடி நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து ஜல். ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது பஞ்சாயத்து நிர்வாகம்.
இந்நிலையில் குமாரபுரம் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக 50 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் மட்டும் இதுவரை சிறுநீரக பாதிப்பால் 8 பேர்உயிரிழந்திருப்பதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.