ஐஸ்கிரீம் வாகனத்தில் ஹெராயின்! சர்வதேச கடத்தல் கும்பலுடன் ஐஸ்கிரீம் வியாபாரிக்கு தொடர்பு எப்படி?
சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தின் குளிர்சாதனப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயினை DRI அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். சர்வதேசச் சந்தையில் ₹700 கோடி மதிப்புள்ள இந்தப் போதைப்பொருள் சென்னையில் இருந்து திருச்சி வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஐஸ்கிரீம் வியாபாரியான தேனியைச் சேர்ந்த அப்துல் சுக்கூர், அவரது மைத்துனர் ஷபீக் அகமது ஆகிய இருவர் கைது செய்யப்பாட்டுள்ளனர். மருத்துவச் செலவுக்காக அப்துல் சுக்கூருக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து உதவிய கடத்தல் கும்பல், பின்னர் அவரைக் கடத்தல் பணியில் ஈடுபடுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தலுக்காக அப்துல் சுக்கூருக்கு ரூ.3 லட்சம் வழங்கப் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மேலும் சிலரைப் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு சர்வதேசக் கடத்தல் கும்பல்களின் வழித்தடமாக மாறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.