×

சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை... மார்ச் 1-ல் அதிரடி மாற்றம்

 

2026-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் விடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. எரிவாயு சிலிண்டர் விலை முதல் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை வரை, இந்த மார்ச் மாதம் பல்வேறு புதிய நடைமுறைகளை கொண்டுள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலை மாற்றம் 

வழக்கம் போல மாதத்தின் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மறுசீராய்வு செய்ய உள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்குமா? அல்லது பொதுமக்களுக்கு நிம்மதி தரும் வகையில் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஃப் கணக்குதாரர்களுக்கு இனிப்பான செய்தி 

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) பணத்தைப் பெறுவதற்கு நீண்ட நடைமுறைகள் இருந்த நிலையில், மார்ச் மாதம் முதல் ஒரு புரட்சிகரமான மாற்றம் அமலுக்கு வருகிறது. இனி ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM) மையங்கள் மற்றும் யுபிஐ (UPI) செயலிகள் வாயிலாகவே நேரடியாக எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஊழியர்களின் அவசரத் தேவைகளுக்கான பணப் பரிமாற்றத்தை இன்னும் எளிதாக்கும்.

ரயில் பயணிகளுக்கான புதிய செயலி 

ரயில் போக்குவரத்தை சார்ந்துள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை இந்திய ரயில்வே விடுத்துள்ளது. இதுநாள் வரை முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளைப் பெறப் பயன்படுத்தப்பட்டு வந்த 'யுடிஎஸ்' (UTS) செயலி, மார்ச் 1, 2026 முதல் முழுமையாகச் செயல் இழக்கப் போகிறது. அதற்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய 'ரயில் ஒன்' (Rail One) என்ற புதிய செயலி பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ரயில் பயணிகள் தடையற்ற பயணத்திற்கு இந்தப் புதிய செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்வது அவசியமாகிறது.