×

"வீடு வீடாக தடுப்பூசி... டார்கெட் நவம்பர்" - மாவட்டங்களுக்கு பறந்த உத்தரவு!

 

பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கிராமங்களில் வீடுதோறும் சென்று நேரடியாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 2ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரைந்து விரிவுபடுத்தும் பொருட்டு அனைத்து மாவட்ட இணை சுகாதார இயக்குநர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட அனைவருக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்குவதற்கான செயல்திட்டத்தை பகுதி மருத்துவ அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்காளர் பட்டியலைப் பெற்று அதன் மூலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவர், தடுப்பூசி செலுத்துபவர், தகவல் பதிவு செய்பவர், இரு பணியாளர்கள் இடம்பெற வேண்டும். அவர்கள் நாள்தோறும் மக்களின் வீடுகளைத் தேடிச் சென்று கணக்கெடுப்பு நடத்தி, தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுகுறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.