×

சும்மா பேச, கூட நடக்க ஆள் இல்லையா..? சீனாவில் டிரெண்டாகும் விசித்திர பிசினஸ்: மாதம் ரூ.70,000 சம்பளம்..!

 

சீனாவில் ஒரு வித்தியாசமான பிசினஸ் ஒன்று உருவாகியுள்ளது. அதுதான்  (Renting a companion service) "துணைவரை வாடகைக்கு எடுக்கும்" சேவை. காசு கொடுத்தால் கடைக்கு வர, சினிமா பார்க்க, ஹோட்டலில் சாப்பிட, ஏன்.. லாங் ட்ரிப் போகக் கூட ஒரு அழகான துணையை வாடகைக்கு எடுக்கலாம்.

மெட்ரோ நகரங்களில் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், சொகுசு வசதிகள் என எல்லாம் இருந்தாலும், மாலையில் வீட்டிற்கு வந்தால் உட்கார்ந்து பேச ஒரு ஜீவன் கூட இல்லாமல் பலர் தவிக்கிறார்கள். மக்களின் இந்த எமோஷனல் பலவீனத்தைத்தான் சீனா இப்போது ஒரு மிகப்பெரிய வணிகமாக மாற்றியுள்ளது.

தினமும் ஆபீஸிலேயே பல மணிநேரங்களைக் கழிப்பதால், அவர்களால் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ நேரம் ஒதுக்க முடிவதில்லை. இந்தச் சூழலில்தான் "தோழமைப் பொருளாதாரம்" என்ற ஒரு புதிய டிரெண்ட் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன்படி, மக்கள் தங்களுடன் சும்மா வாக்கிங் செல்ல, படம் பார்க்க அல்லது மனசு விட்டுப் பேச ஒருவரை வாடகைக்கு எடுத்து, அவருக்கு மணிநேரக் கணக்கில் பணம் கொடுக்கிறார்கள். மிக முக்கியமாக, இந்த உறவில் காதல், திருமணம் அல்லது பாலியல் சார்ந்த விஷயங்கள் எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு 'புரொஃபெஷனல் பிரண்ட்ஷிப்' அவ்வளவுதான்.

சீனாவில் இதற்கென்றே பிரத்யேகமாகப் பல ஆன்லைன் ஆப்களும், இணையதளங்களும் களமிறங்கியுள்ளன. இவை, தனிமையில் தவிப்பவர்களையும், துணையாகச் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பவர்களையும் கச்சிதமாக இணைக்கின்றன.

சிலர் தனியாக ஷாப்பிங் போகப் பயந்து ஒருவரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
சிலர் காபி குடித்துக்கொண்டே பேச ஆள் தேடுகிறார்கள்.
சிலர் வெளியூர்களுக்குத் தனியாகப் பயணம் செய்யப் பிடிக்காமல் டிராவல் பார்ட்னரை முன்பதிவு செய்கிறார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், இது இளைஞர்களுக்கு மட்டுமின்றி, வீட்டில் தனியாக வாழும் முதியவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.


இந்த விசித்திரத் தொழில் சீனாவில் தற்போது பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், 10 ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட பல குட்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இன்று நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் கார்ப்பரேட் நிறுவனங்களாக வளர்ந்துள்ளன. இந்த தொழில் இருக்கும் ஊழியர்கள் மாதம் 50,000 முதல் 70,000 வரை சம்பாதிக்கிறார்கள்.