×

பஸ் பாஸ் இன்னும் வரலையேனு கவலை வேண்டாம்.. இந்த 2 விஷயங்கள் இருந்தா போதும் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அதிரடி..!

 

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உத்தரவின்படி, வரும் ஜூன் 4, 2026 முதல் புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் தொடங்குகின்றன. தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களும் திறக்கப்பட உள்ளன.

புதிய கல்வியாண்டிற்கான (2026-27) 'இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் பணிகளை தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மாணவர்கள் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலமாகவே இந்த புதிய பாஸ்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான நிர்வாக நடைமுறைகளுக்கு சில நாட்கள் தேவைப்படும் என்பதால், அதுவரை பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி சீருடையை அணிந்து கொண்டு, இருப்பிடத்திலிருந்து பள்ளி வரை எவ்வித கட்டணமும் இல்லாமல் அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தங்களுக்கு கல்வி நிறுவனங்கள் வழங்கிய பழைய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து, கட்டணமில்லாமல் பேருந்துகளில் தாராளமாகப் பயணம் செய்யலாம்.

பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும், அவை முடிவடையும் நேரத்திலும் அரசுப் பேருந்துகள் எவ்வித தாமதமும் இன்றி முறையாக இயக்கப்படுவதைக் கண்காணிப்பதற்காக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மாணவர்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை கட்டாயம் நிறுத்த வேண்டும் என்றும், மாணவ, மாணவியர்களைப் பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குத் துறை ரீதியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.