யாரையும் நம்பிப் போகாதீங்க! பாஜக தொண்டர்களுக்கு நயினார் நாகேந்திரன் அவசர வேண்டுகோள்!
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணாமலை ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இருப்பதாக நேற்று செய்திகள் பார்த்தேன். பாஜவின் ஒன்று, இரண்டு பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள். நிறைய அடிப்படை மட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் போயிருக்கிறார்கள். அவர்களை மூளை சலவை செய்து அதாவது பிரதமர் மோடியின் ஆசியோடு தான் நாங்கள் ஆரம்பிக்கிறோம் என்றும், அதே நேரத்தில் இது ஒரு இயக்கம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தேசிய தலைவர்களின் ஆசி எந்த இயக்கத்திற்கும் கிடையாது. பாஜ தேசம், இந்த நாடு என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் இன்றைக்கு இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்திலிருந்து நிறைய மூத்த தலைவர்கள் வெளியே போய் மீண்டும் வந்ததால்தான் வரலாறு இருக்கிறது.
இந்த இயக்கத்தில் இருந்து யாரும் வெளியே போய் செயல்பட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு இதுவரை தெரியாது.பாஜ தொண்டர்களுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் யாரையும் நம்பி போக வேண்டிய அவசியம் இல்லை, யாருடைய ஆசீர்வாதமும் எந்த இயக்கத்திற்கும் கிடையாது. இயக்கத்தில் இருப்பவர்கள் நிச்சயமாக பாஜவின் தொண்டர்களாக இருக்க முடியாது. பாஜவில் இருப்பவர்கள் மட்டுமே இங்கே இருக்க முடியும். வேறு எந்த ஜாதியை அமைப்புகள் மற்றும் வேறு எந்த இயக்கத்திலும் இருக்க முடியாது. யாரும் இதை நம்பி போக வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பாஜவுக்கு இதுவரை எந்த வகையிலும் பின்னடைவு கிடையாது. பாஜ உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி. இன்றைக்கு மிகப்பெரிய தலைவர்கள் வரிசையில் பட்டியலில் முதலில் இருப்பது மோடி தான். பிரதமர் மோடியின் வழியில் தான் தமிழக பாஜ இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சியில் இருப்பவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்த பிறகு அவர்கள் மீது எப்படி ஆசி இருக்க முடியும்? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.