×

இனி போன் தொடக்கூடாது..! - தாய் திட்டியதால் விபரீத முடிவு; சேலத்தில் 18 வயது மாணவி தற்கொலை!

 

சேலம் எடப்பாடி இருப்பாளி கிராமத்தில் உள்ள குருக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா. இவரின் கணவர் வெங்கடாசலம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இவர் இறந்துவிட்டார். ஆகையால், மகன் அஜித் குமார் (20) மற்றும் மகள் கௌசல்யா தேவி (18) ஆகிய இருவருடன் சுசீலா தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், கூலி வேலை பார்த்து தனது குழந்தைகளை அவர் படிக்க வைத்து வந்துள்ளார்.

அதில், கௌசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். முதலாம் ஆண்டு தேர்வில் அவர் 10 பாடங்களில் (Arrears) தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்தாமல், கௌசல்யா எப்போதும் செல்போனும் கையுமாகவே இருந்து வந்ததால், அவரது தாய் சுசீலா மகளை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பும், கௌசல்யா அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்தியதால் தாய் சுசீலா அவரை கடுமையாக சாடியுள்ளார். "இனிமேல் செல்போன் பார்க்கக் கூடாது, ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கௌசல்யாவை சுசீலா எச்சரித்துள்ளார்.

தாயின் இந்த கண்டிப்பால் மனவேதனையடைந்த கௌசல்யா, கடந்த 15-ஆம் தேதி கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியவுடன், வீட்டில் இருந்த விவசாய பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கௌசல்யாவை மீட்ட உறவினர்கள், அவரை உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலன் தராமல் இன்று (ஜூலை 20) காலை கௌசல்யா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பூலாம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.