"இன்றும் நாளையும் போகாதீங்க!" - வண்டலூர் பூங்கா 2 நாட்களுக்கு மூடல்..!
சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் இயற்கையான சூழலில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், நவீன வசதிகளுடன் சுமார் 180 வகைகளைச் சேர்ந்த 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பூங்காவைக் காண சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் நீர்ப் பறவைகளுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மத்திய பிரதேசம், போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட்டிருந்தது. அந்நிறுவனம் கொடுத்த பரிசோதனை முடிவில், நீர்ப்பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக இன்று (அக்.22) மற்றும் நாளை (அக்.23) ஆகிய இரண்டு நாட்களுக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருமி நாசினி தெளித்தல், நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துதல், விலங்குகளைக் கண்காணித்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளது. கடந்த அக்டோபர் 09- ஆம் தேதி முதல் இதுவரை பறவைகளிடையே உயிரிழப்புகளோ அல்லது நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளோ கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. வண்டலூர் பூங்கா நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.