×

அந்தக் கூட்டத்தின் வழியில் போயிடாதீங்க... நமக்கான தனி வழி இருக்கு..! - மாணவர்களிடையே முதல்வர் ஸ்டாலின் உரை

 

 ‘கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் ஒருபோதும் சென்றுவிடக் கூடாது” என  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில்  மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.  

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக  கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  இன்று 2 நாள் பயணமாக திருவாரூருக்கு செல்கிறார்.  முன்னதாக  சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், அங்குள்ள ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். பின்பு கல்லூரி மாணவ மாணவிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களிடையே பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் அரசியல் பேச இங்கு வரவில்லை. ஆனால் மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம். காந்தி வழி... அம்பேத்கர் வழி... பெரியார் வழி என்று நமக்கான வழிகள் உள்ளன. ஆனால் ஒருபோதும் மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது. 

ஓரணியில் தமிழ்நாடு நின்றால் யாரும் வீழ்த்த முடியாது. எப்போதும் மாணவர்கள் அதிகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு நான் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பேன். இந்தக் கல்லூரி ஒற்றுமையை வெளிப்படுத்தும் கல்லூரியாக திகழ்ந்து வருகிறது. இங்கு உங்களுக்குள் உருவாக்கக்கூடிய நட்பு எல்லா காலத்திலும் தொடர வேண்டும். கல்லூரி நட்பு என்பது முதியவர் ஆனாலும் நீடிக்க வேண்டும். அது இந்த சமூகத்திலும் எதிரொலிக்க வேண்டும்.

இந்தக் கல்லூரியை உருவாக்கியவர்கள் இருவரும் நட்பு உறவு கொண்டிருந்தனர். அவர்களின் கனவு மதம், ஜாதி, மொழிகளைக் கடந்து அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது அவர்களுடைய கனவும் நிறைவேறியுள்ளது. கல்விதான் யாராலும் பிரிக்க முடியாத ஒரே சொத்து. அதை வழங்கிடவும் அதற்கான திறன் மேம்பாட்டை வளர்க்கவும் அதனால் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது.

இந்தக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கடந்த 75 ஆண்டுகளில் இந்த சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உயர்ந்துள்ளார்கள். உயர்ந்த சிந்தனையாளர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல் வடிவமாக மாற்றக் கூடியவர்கள் மாணவர்கள்தான்.

மாணவர்களுக்கு படிப்பு மிகவும் முக்கியம். அதுதான் உங்களுடைய நிலையான சொத்து. இந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் உங்கள் கல்லூரியில் உங்களுக்கு சீனியர், ஆனால் தற்போது என்னுடைய கேபினட்டில் சீனியர் அமைச்சர்களாக உள்ளனர். நாளை உங்களில் இருந்து சிலர் இங்கு வரலாம். வரவேண்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.” என்றார்.