மறந்துடாதீங்க..! இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்..!
நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவச சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அந்த வகையில், குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் நோயைத் தடுக்க தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு முகாமை சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் வைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாமை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் உள்ளிட்ட 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இந்த முகாமின் மூலம் 5 வயதிற்குட்பட்ட 52.91 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், முகாம் நாளில் அனைத்து குழந்தைகளுக்கும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, பயணத்தில் உள்ள குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஜூன் 28ஆம் தேதி அனைத்து மையங்களிலும், ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தற்காலிக மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இம்முகாமின் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
மேலும், தொலைதூர மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி, முகாமை வெற்றிகரமாக்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.