கையில் கயிறு கட்டி பள்ளிக்கு வரக்கூடாது..! – ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி தடை!
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக ஐந்தாயிரம் பள்ளிகளில் ஏஐ, பைத்தான் உள்ளிட்ட கோடிங் கற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்தாண்டு தேர்ச்சி நல்ல நிலையில் இருந்தாலும் போதாது; தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்தோம். மதம், ஜாதி அடையாளங்களோடு கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டிப் போட்டுவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிக்குத்தான் இடம்.
இங்கு ஒரே ஒரு விஷயத்திற்கு தான் வாய்ப்பு, அறிவியல். அடுத்த தலைமுறை போன தலைமுறையை விட கல்வியில் இன்னும் சிறப்பாக வர வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழகம் நன்றாக இருக்கிறது, சந்தோஷம். மற்ற நாடுகளை விட சிறப்பாக வர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
பள்ளியும், கல்லூரியும் மிக முக்கியமான இடங்கள்.போதையின் பாதைக்கு சென்றுவிடாமல் தடுக்க எல்லா விஷயங்களையும் முன்னெடுக்க தயாராக இருக்கிறோம். பிரிவினையை வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை, ஒற்றுமையை வளர்க்க கூடிய எதுவாக இருந்தாலும் வாங்க, இடம் இருக்கிறது.
இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.