இதை யாரும் நம்ப வேண்டாம்..! வெப்பநிலை குறித்து பகிரப்படும் போலிச் செய்தி..!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் தொடக்கம் முதல் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாள்தோறும் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லவே தயங்கும் சூழல் இருந்து வருகிறது.
பரவும் தகவல் :
Whatsapp மற்றும் ஏனைய சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.அதாவது ஏப்ரல் 29 முதல் மே 12 வரை நாட்டின் வெப்பநிலை 45°C முதல் 55°C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும், அதன் காரணமாக நேரடி வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டாம் என்றும், ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்), எனவே எவருக்கேனும் மூச்சுத் திணறல் அல்லது திடீரென நோய்வாய்ப்பட்டால், உடனடியாக ஒரு மருத்துவரை நாடவும், காற்றோட்டம் இருக்கும் வகையில் அறைக் கதவைத் திறந்து வைக்கவும், செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவும்,செல்போன் வெடிக்கும் அபாயம் உள்ளது, தயவுசெய்து கவனமாக இருங்கள் மற்றும் மக்களுக்கு இதனை அறிவுறுத்துங்கள்” என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
மூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவரும் இப்பதிவு குறித்து ஆராய்ந்து பார்த்ததில்,வானிலை மையம் இது போன்ற எச்சரிக்கையை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் ஏதேனும் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்று அதன் இணையதளத்தில் தேடினோம். அதில், “இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலையின்போது, அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்திற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான வரைபடத்தையும் இணைத்துள்ளது. அதில் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று எந்த தகவல்களும் இல்லை.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கடந்த ஒரு வாரத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் அவ்வாறான எந்த எச்சரிக்கையும் இடம்பெறவில்லை.