×

இனி வெயிலை நினைச்சு பயமே இல்ல! களமிறங்கும் 'கூல் ரூஃப்' மாஸ்டர் பிளான்!

 

தமிழகத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு புதிய மாநில வெப்ப செயல் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இப்புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக மாவட்ட வாரியாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற வார்டு அளவிலான வெப்ப அபாய வரைபடம் (Heat Vulnerability Mapping) தயாரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் எந்தெந்த பகுதிகளில் அதிகப்படியான வெப்பம் பதிவாகிறது என்பது முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காப்பதற்காக, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு (Early Warning System) இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் மூலம் வெப்ப அலை ஏற்படும் சூழல்கள் முன்கூட்டியே கணிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து அவசரக்கால தடுப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன. குறிப்பாக, முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் வெளிப்புற தொழிலாளர்கள் போன்ற வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய விளிம்புநிலை மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கிப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வெப்ப பாதிப்புகளுக்கு தற்காலிகத் தீர்வுகள் மட்டுமின்றி, எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீண்டகால பசுமை தீர்வுகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. அதன்படி, நகர்ப்புறங்களில் கட்டிடங்களின் வெப்பத்தை குறைக்கும் 'கூல் ரூஃப்' (Cool Roof) தொழில்நுட்ப முறைகள், தீவிர மரக்கன்றுகள் நடும் திட்டங்கள், பொது இடங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர நிழல் வசதிகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து பெருக்கும் இயற்கை குளிரூட்டும் கட்டமைப்புகள் ஆகியவை மாநிலம் முழுவதும் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன.